×

புதிதாக 200 கண்காணிப்பு : கேமரா பொருத்த முடிவு

நாமக்கல், செப்.13: நாமக்கல் நகரில் குற்றங்களை தடுக்க புதியதாக 200 கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், காவல்நிலையத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த பொது இடங்கள், வணிக வளாகங்கள், கடை வீதிகள், ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த அனைத்து தெருக்கள், சாலைகள், நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நாமக்கல் நகரில் ஏற்கனவே 300 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, எஸ்கே நகர் உள்ளிட்ட 12 இடங்களில், சாலைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் டூவீலர் மற்றும் கார்களின் நம்பர் பிளேட்களை எளிதில் அடையாளம் கண்டு படம் பிடித்து விட முடியும். இதனையடுத்து, இது போன்ற கேமராக்களை பொருத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் நகரில் 3 இடங்களில் மர்ம நபர்கள், வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

அந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவத்திதில் ஈடுபட்டவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பின்பு, போலீசாரின் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்தது. போலீசாரின் தொடர் வாகன சோதனை, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு போன்றவற்றின் காரணமாக நகரில் குற்றங்கள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் நகரில் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த, மேலும் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முக்கிய இடங்களில் உள்ள கேமராக்களை ஒருங்கிணைந்து கண்காணிக்க, நாமக்கல் காவல்நிலையத்தின் மேல் மாடியில் மெகா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் கூறுகையில், ‘நகரில் இரவு நேரங்களில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது. குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகரில் உள்ள முக்கிய சாலைகள், இரவில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் என கண்டறிந்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேந்தமங்கலம் சாலையில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. எனவே, அந்த சாலையில் இரவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்கும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

The post புதிதாக 200 கண்காணிப்பு : கேமரா பொருத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!